சீனா தவிர்த்த பிற நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, சிங்கப்பூர் சில விடைகளைத் தருகிறது.
கடந்த புதன்கிழமை சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வங்கி ஒன்றின் ஊழியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த வங்கியில் பணியாற்றிய 300 ஊழியர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதற்காக ஒட்டுமொத்த அலுவலகத்திற்கே விடுமுறை அளிக்கும் நிலையில்தான் சிங்கப்பூரில் கொரோனா குறித்த அச்சம் மேலோங்கி வருகிறது.
ஏனெனில் சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரசால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கப்பூரும் ஒன்று. அங்கு 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பல வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கண்டறியப்பட்டாலும், சிங்கப்பூரில் இந்த எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.
ஒன்று சீனாவுடன் சிங்கப்பூருக்கு இருக்கும் வர்த்தக உறவுகள். கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் சுமார் மூன்றரை மில்லியன் சீன மக்கள் சிங்கப்பூருக்கு வந்திருப்பதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை நாம் புரிந்து கொள்ளலாம்.
இரண்டாவதாக உலக நாடுகளை விமானப் பயணத்தின் மூலம் இணைக்க கூடிய முக்கிய மையமாக செயல்படும் ச்சங்கி விமான நிலையத்தை கூறலாம். இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு 80 விநாடிகளுக்கும், ஒரு விமானம் புறப்படுகிறது ஒரு விமானம் தரையிறங்குகிறது. அந்த அளவுக்கு மிகவும் பரபரப்பான இயங்க கூடிய, வெளிநாட்டு மக்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதி..